12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
"செம்பரிதி".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரிய நிழல்
2.
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
3.
‘நகரம் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
4.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
5.
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் கட்டிப் பொருள் விளக்கம் தருக.
6.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
7.
பின்வரும் இரு பாக்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
1. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.
- நன்னூல்
2. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
- சிற்பி பாலசுப்பிரமணியம்
8.
'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
9.
சொல்லோவியங்கள் (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளியாசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றையும் எழுதுக.
10.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
11.
பாரதியின் கடிதம் வாயிலாய் நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
12.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
13.
இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?
சூரிய காந்தி
சூரிய பார்வை
ஒளிப்பூ
சூரிய நிழல்
14.
கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
ஒரு கிராமத்தின் கதை
ஒரு கிராமமே அழுதது
ஒரு கிராமத்தின் நதி
ஒரு புளியமரத்தின் கதை
15.
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
குற்றால மலை
விந்திய மலை
இமய மலை
சாமிமலை
16.
________________ இருந்து கவிதைகளையும் புதினங்களையும் சிற்பி பாலசுப்பிரமணியம் மொழிபெயர்த்துள்ளார்.
மலையாளத்தில்
கன்னடத்தில்
மராத்தியில்
ஆங்கிலத்தில்
17.
இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்டவை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் ________________.
கவிதை நூல்கள்
உரைநடை நூல்கள்
மொழிபெயர்ப்பு நூல்கள்
புதினங்கள்
18.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல் __________________.
நிலவுப்பூ
ஒரு கிராமத்து நதி
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
19.
தம் கைகள் சிவந்து நோக வியர்வை சிந்தி உழைப்பவர்கள் ______________.
பாண்டியர்கள்
வள்ளல்கள்
புலவர்கள்
தொழிலாளர்கள்
20.
கூவி வா, வா! குயிலே! என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அழைப்பது ______________.
தமிழை
பரிதியை
கைகளை
வள்ளல்களை
21.
கவிதை வெறிக்கு உணவாய் உள்ளது __________________.
வியர்வை
செந்நிறம்
பூக்காடு
முத்தமிழ்
22.
1963 - ல் வெளிவந்த சிற்பி பாலசுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்பு ________________.
ஒளிப்பறவை
நிலவுப்பூ
ஒரு கிராமத்து நதி
சூரிய நிழல்
23.
'முத்தமிழே' என்பது, ___________ எனப் பிரியும்.
முத் + தமிழே
மு + தமிழே
முத்து + தமிழே
மூன்று + தமிழ் + ஏ
24.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _________________.
அஃறிணை, உயர்திணை
உயர்திணை, அஃறிணை
விரவுத்திணை, அஃறிணை
விரவுத்திணை, உயர்திணை
25.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் _______________.
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
26.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
27.
''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது.
இ) வள்ளல்களைத் தந்தது.
க மட்டும் சரி
க, ஆ இரண்டும் சரி
இ மட்டும் சரி
க, இ இரண்டும் சரி
28.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய நயங்களை எழுதுக)
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
1.
2.
இனநிரை - இனம் + நிரை
(i) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, 'ம' கரமெய் (ம்) கெட்டது. ன(ன் + அ) உயிர் ஈறாய் நின்றது.
(ii) வருமொழி முதலில் மெல்லின 'ந'கரம் வந்ததால் இயல்பாய்ப் புணர்ந்தது. இன + நிரை - இனநிரை.
3.
(i) தொடர்மழை பெய்துகொண்டிருந்த மழைக்காலம் அது.
(ii) மேகங்களை விலக்கிக்கொண்டு சூரியன் தோன்றியது.
(iii) அதுவரை மழைமேகத்தால் மறைப்புண்டிருந்த சூரியக்கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவியது.
(iv) மழையால் இருள் சூழப்பட்ட நகரம், பட்டை தீட்டப்பட்ட வைரம் போல 'வெள்ளை வெளேர்’ என்று பளிச்சென்றிருந்தது.
4.
அந்தி நேரத்தில் மேற்கு வானில் கதிரவன் மறையும் எழில் காட்சி.
வியர்வை சிந்தி, கடுமையாய் உழைத்துச் சிவந்த கைகளை உடைய தொழிலாளியின் நிலை. இவற்றைப் பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார், கவிஞர் சிற்பி.
5.
இடம் : ‘ஓங்கலிடை' எனத் தொடங்கும் தண்டியலங்கார மேற்கோள் பாடலில் இடம் பெற்ற அடி இது.
பொருள் : சூரியனும் தமிழும், கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலுள்ள இருளைப் போக்கும் தன்மை வாய்ந்தன.
விளக்கம் : சூரியன் உதயமாகி, மலையில் தோன்றி, உலகிலுள்ள புறஇருளைப் போக்குகிறது.
பொதியமலையில் தோன்றிய தமிழ், மக்களின் அகத்தில் உள்ள அறியாமை இருளைப் போக்குகின்றது.
6.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
7.
1. முற்கால இலக்கணங்கள் சில பிற்காலத்தில் வழக்கொழிந்துவிடும்.
(i) முன்பு இல்லாத சில, பிற்காலத்தில் இலக்கணமாவதுண்டு.
(ii) இவ்வாறு காலத்திற்கேற்ப மாறுவது குற்றமில்லை என்கிறது, நன்னூல்.
2. சங்க காலத்தில் மக்களும் மன்னரும் மானமுள்ளவராய் வாழ்ந்தனர்.
(i) பழிக்கு அஞ்சினர்; புகழை விரும்பினர்.
(ii) தன்னலம் கருதாது பொதுநலம் போற்றினர்.
(iii) சங்க காலம் இலக்கிய வரலாற்றிலும், மக்கள் வாழ்வியலிலும் பொற்காலமாய் விளங்கியது.
(iv) இத்தகைய பொற்காலம் மீண்டும் வரவேண்டும். எனவே, “பழமை நலம் புதுக்குதற்கு” என்று சிற்பி பாடுகிறார்.
8.
பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தைத் தருகிறான், கதிரவன்.
மாலையில் மேற்குத்திசையில், செந்நிற ஒளி பரப்பி வானத்தைச் செம்மை ஆக்குகிறான்.
அக்காட்சி, சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்த பூக்காடு போல இருப்பதாய் சிற்பி கூறுகிறார்.
9.
தலைமைத் தமிழாசிரியர்
வ.வேலுச்சாமியின்
சொல்லோவியங்கள்
(கவிதை நூல்)
வெளியீட்டு விழா
இடம் : நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி
நாள் : 20-03-2019 நேரம் : மாலை - 4 மணி
நிகழ்ச்சி நிரல்
| தமிழ்த்தாய் வாழ்த்து | செல்வி காவியவள்ளி |
| வரவேற்புரை | திரு. தமிழரசன் அவர்கள் (தமிழாசிரியர்) |
| தலைமை ஏற்பவர் | திருமதி ஜெ. ஜெயலட்சுமி அவர்கள் (தலைமையாசிரியர், நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளி) நூலை வெளியிட்டுச் சிறப்புரை : திரு. சி. இராஜேந்திரன் (தொழிலதிபர், உசிலம்பட்டி) |
| முதற்பிரதியைப் பெறுபவர் | கவிஞர் என். பரமநாதன் |
| வாழ்த்துரை | எழுத்தாளர் குமரி அனந்தன் அவர்கள் |
| ஏற்புரை | திரு. வ. வேலுச்சாமி |
| நன்றியுரை | செல்வன் அ. கதிர்வேல் (மாணவர் தலைவர்) |
நாட்டுப்பண்
நன்றியுரை
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
தலைமையேற்ற இலக்கிய ஆர்வலரான என் பள்ளித் தலைமையாசிரியர், 'மாணவர்கள் அனைவரும் பள்ளிப் பாடங்களுடன் பைந்தமிழ் நூல்களையும் பல்வகைக் கலைகளையும் கற்றுச் சிறப்புற வேண்டும்' எனக் கூறுவார்கள். அத்தகைய நல்லுள்ளமும் இலக்கிய ஈடுபாடும் மிக்க தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.
தமிழைத் தமது இரு கண்களாய்ப் போற்றும் தொழிலதிபர் ஐயா திரு. இராஜேந்திரன் அவர்கள் தம் இராசியான திருக்கரங்களால் 'சொல்லோவியங்கள்' நூலினை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றிச் சிறப்பித்தார்கள். அவர்களுக்கு என் பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கவிதை நூலின் முதல் பிரதியைப் பெற்றுச் சிறப்பித்த ஐயா கவிஞர் பரமநாதன் அவர்கள், கவிதையில் சுவைத்த தம் கருத்துகளைச் சுருக்கமாய்க் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி.
பல்வேறு பணிகளுக்கு இடையில், எங்கள் அன்பான அழைப்பை ஏற்று வந்தவர், ஐயா, எழுத்தாளர் திரு. குமரி அனந்தன் அவர்கள், எழுச்சிமிகு உரையால் மாணவர்களைத் தம் வசப்படுத்தி, நற்கருத்துகளை மாணவ மனங்களில் பதியச்செய்தார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
நாளும் வகுப்பில் சொற்களை மாணவர் மனங்களில் ஓவியமாய்ப் பதிவு செய்து வருபவர் என் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் அவர்கள். அவர்கள் இயற்றிய "சொல்லோவியங்கள்” என்னும் நூலை நம் பள்ளியில் வெளியிட வாய்ப்பளித்த அவர்களுக்கும் என் நன்றி.
வரவேற்புரை நல்கி, விழா ஏற்பாடுகளை நெறிப்படுத்திய என் தமிழாசிரியர் ஐயா திரு. தமிழரசன் அவர்களுக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சகோதரிக்கும் நன்றி.
விழா நிகழ்வில் பங்கேற்ற பெரியோர்கள், மாணவ நண்பர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி.
விழா நடத்த அனுமதி தந்த பள்ளி நிர்வாகத்தினருக்கும் ஒலி, ஒளி அமைத்துத் தந்த நண்பர்களுக்கும் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
10.
முன்னுரை : ஊர் கூடித் தேர் இழுப்பது போல, ஊரின் நன்மைக்குப் பயன் அளிக்கும் ஒரு செயலைச் செய்யப் பலரின் உழைப்புத் தேவை. அத்தகைய செயலுக்கு முதல் ஆளாய் 'வடம் பிடித்தவன்’ மருதன். அவனது பண்புநலத்தை அறிவோம்.
கெடுப்பதும் வாழவைப்பதும் மழையே ! : மருதன், வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்று வயல்கள். மழையை நம்பிப் பயிரிட்டவை. இப்போது கொட்டும் மழையால் பயிர் கெட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘மழைநீர் வயலில் தேங்காமல் வடிந்து செல்ல என்ன செய்யலாம்' என்று மருதன் சிந்தித்தான்.
தடுக்கும் செடிகளை ஒதுக்கும் வழி : மருதன் வடிகால் வாய்க்கால்வழி நடந்து சென்றான். அந்த வடிகால் வாய்க்கால் மூன்று மைல் நீளமுள்ளது. அதில் முழுவதும் காட்டாமணக்குச்செடிகள் மண்டிக்கிடந்தன. அவற்றை அகற்றினால் உபரிநீர் வடிந்துவிடும். ஆனால், அவை முழுவதையும் எப்படி அகற்றுவது ?
ஊரார் உதவ முன்வராமை : வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்குச்செடியை அகற்ற ஊர் மக்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் மருதனுக்கு ஏற்பட்டது. எதிரில் வந்த மாரியிடம் சொன்னபோது, ''ஊரை ஒன்றுகூட்டு; மற்றதைப் பிறகு பார்ப்போம்'' என்று பொறுப்பில்லாமல் கூறிச் சென்றான்.
மருதன், மிராசு காளியப்பனிடம் விஷயத்தைக் கூறிய போது, அவர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய், மறுநாள் மகள் வீடு செல்ல வேண்டும் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்.
'பொதுச்சேவை’ என்று பொழுதைக் கழிக்கும் பிரேம்குமாரிடம் மருதன், கால்வாய் பற்றிக் கூறினான். அதற்கு, ‘அரசாங்கம் உள்ளது; எனக்குப் பலவேலைகள் உள்ளன' என்று அவனும் பொறுப்பைத் தட்டிக் கழித்தான்.
பிள்ளையார் சுழி போட்ட மருதன் : ஒருவரும் ஒத்துவராத நிலையில், இரவில் சிந்தித்தபடியே தூங்கிய மருதன், அதிகாலையில் தனி ஆளாய் ஆமணக்குச்செடியை வெட்டத் தொடங்கினான். கணவனைக் காணாத மருதனின் மனைவி கால்வாய்க்கு வந்தாள். கணவனுக்கு உதவியாய், வெட்டப்பட்ட காட்டாமணக்குச்செடிகளை வெளியே கொண்டுபோய்ப் போட்டாள்.
தூரத்தில் மீன் பிடித்த மாரியின் கண்ணில் இந்தக் காட்சி பட்டதும் அவனும் உதவிக்கு வந்தான். அந்த வழியாய் மாட்டுவண்டியில் சென்ற மிராசுதார் காளியப்பன், வண்டியை நிறுத்தச் சொல்லி, வாய்க்காலில் இறங்கி உதவினார். வண்டிக்காரன் மூலம் செய்தி ஊருக்குள் பரவியது. உறுத்தல் தாங்காத ஊர்மக்கள் உதவிக்கு வந்தனர். கால்வாய் சுத்தமானது. வயல் பிரச்சினைக்கும் தீர்வு வந்தது.
முடிவுரை : எல்லோரும் நல்லவர்களே. ஆனாலும், தனிமனித நோக்கைத் தாண்டிப் பொதுநல நோக்கோடு செயல்பட ஒரு தூண்டுகோல் வேண்டும். அத்தகைய தூண்டுகோலே மருதன். அவனின் பண்பு போற்றத்தக்கது.
11.
முன்னுரை : புலவர்கள் இலக்கியங்களைப் படைத்து, அரசர்கள், வள்ளல்கள் ஆகியோரிடம் சென்று பாடிப் பொருள் பெற்று வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஒரு திருப்புமுனையாய்த் தோன்றியவர், பாரதி. ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்' என்னும் கொள்கையோடு வாழ்ந்தவர். அந்நியருக்கு எதிராக விடுதலை உணர்வூட்டும் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார் பாரதி. அவன் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் வாயிலாய் அவரின் மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை அறிவோம்.
மொழிப்பற்று : "தமிழ்! தமிழ்! தமிழ்! என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாய்க் கொள்க!” என்று கடிதத்தில் எழுதினார்.
பிற மொழிகளான இந்தி, மராட்டி போன்றவற்றையும் அறிவது நல்லது என்கிறார் காரணம், பிற மொழி பத்திரிகைகள் மூலம் புதுமைகளை அறியலாம் என்கிறார்.
அத்தகைய புதுமைகளைத் தமிழ்ப்பத்திரிகையில் சேர்க்கும்போது, தமிழில் புதுமை ஏறிக்கொண்டே போகும்.
கண்கள் இருந்தும் கற்க இயலாத அறியாமை மிக்க மக்களின் இழிநிலை போக்க விரும்பினார்.
"தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப்பள்ளிகள் மலிக; அங்கு நவீனக் கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க” என்று கடிதத்தில் குறிப்பிடுகிறார், பாரதி.
இசை, சிற்பம் ஆகியன தொடர்பான நூல்களும், இயற்கை, பூமி, வானம் ஆகியவைபற்றிய நூல்களும் மேலும் பலதுறை நூல்களும் தமிழில் தோன்றித் தமிழ்நாடெங்கும் மலிந்திட வேண்டும் என்கிறார், பாரதி.
சமூகப்பற்று : அன்றைய நாளில் ஆண்கள் பெண்களை அடிமைகளாய்க் கருதிச் செயல்பட்டனர். அதனைக் கண்டு கொதித்தார், பாரதி.
கடிதத்தில் பாரதி, “ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரு தலைகள். அவை ஒன்றிலொன்று தாழ்வு இல்லை. பெண்ணைத் தாழ்மை செய்தவன் கண்ணைக் குத்திக்கொண்டவன்” என்றார்.
அந்நியர் ஆட்சியில், தமிழ் மக்களிடையே அறியாமையும் அச்சமும் மேலோங்கி இருந்தன.
இதனைப் பாரதி, "நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைத்திட முயற்சி பண்ணும் மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி” என்றார்.
முடிவுரை : பாரதியின் கடிதம் வாயிலாக அவரின் மொழிப்பற்று, சமூகப்பற்று விளங்குகிறது. எல்லாத் துறைகளிலும் தமிழன் சிறந்து விளங்கி, வையத்தலைமை கொள்ளும் மாண்பினைப் பெற வேண்டும் என்கிறார், பாரதி.
12.
பொன்னிறப் பூக்காடோ! : மேற்கில், மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி ! : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறியுள்ளது; தோள்களில் முத்துமுத்தாய் வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை ! : அந்திவானத்தின் செந்நிறக்காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி ! : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. சிறப்புமிக்க தமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தது.
அந்த நாளும் வந்திடாதோ ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்த பாரி போன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு ! : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல், பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
13.
(d)
சூரிய நிழல்
14.
(c)
ஒரு கிராமத்தின் நதி
15.
(a)
குற்றால மலை
16.
(a)
மலையாளத்தில்
17.
(b)
உரைநடை நூல்கள்
18.
(b)
ஒரு கிராமத்து நதி
19.
(d)
தொழிலாளர்கள்
20.
(a)
தமிழை
21.
(d)
முத்தமிழ்
22.
(b)
நிலவுப்பூ
23.
(d)
மூன்று + தமிழ் + ஏ
24.
(b)
உயர்திணை, அஃறிணை
25.
(c)
தொல்காப்பியம்
26.
(a)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
27.
(d)
க, இ இரண்டும் சரி
28.
'கவியரசர்' என்று புகழ் பெற்றவர் கண்ணதாசன் அவர்கள். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களை எழுதியவர். அரசவைக் கவிஞராய்ப் போற்றப்பட்டவர். இவர் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
திரண்ட கருத்து
தலைவியாய் விளங்கும் தமிழரசியே! பாண்டியர்களைக் கொண்டு முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று தமிழ்ச்சங்கங்கள் மதுரையில் அமைந்திடச் செய்தாய். அச்சங்கங்களில் அறிவிலும் வயதிலும் முதிர்ச்சி பெற்ற புலவர் பல நூறு பேரைப் பங்கு கொள்ளச் செய்தாய். அவர்களைக் கொண்டு, அளவற்ற பலவித உட்பொருள்களைக்கொண்டு இனிமை துலங்கிடும் கவிதைகளைப் படைத்திடுமாறு செய்தவளே! வாழ்க.
மையக்கருத்து
பாண்டியர்களைக்கொண்டு முச்சங்கங்கள் அமைக்கச் செய்து, பொருள்வளமும் சொல்நயமும் மிக்க பல நூறு பாடல்களைப் பல நூறு புலவர்களால் ஆக்கி அளித்திடச் செய்த தமிழரசி, வாழ்க!
தொடை நயம்
எதுகை : முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, எதுகை.
முச்சங்கம், அச்சங்கம்
சொற்சங்க, அற்புதங்க - ‘ற்'
மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது, மோனை.
முச்சங்கம், முதுபுலவர் - 'மு'
அச்சங்க, அளப்பரிய ‘அ’
சொற்சங்க, சுவைமிகுந்த - ‘சொ, சு’
அற்புதங்க, அமைத்த - 'அ'
இயைபுத்தொடை : அடிதொறும் ஈற்றுச்சீர் அல்லது ஈற்றசை அல்லது ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத்தொடை.
தமைக்கூட்டி, பொருள்கூட்டி, கவிகூட்டி, பெருமாட்டி - 'கூட்டி', 'ட்டி'.
சந்தம் : 'சந்தம்' என்பது இனிய இசை. இப்பாடலில் வல்லினமும் மெல்லினமும் இணைந்து ஓசை நயத்தைத் தருகின்றன.
அணி : தமிழின் பெருமையை உள்ளது உள்ளபடி கூறியதால், இயல்பு நவிற்சியணி.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards